இலங்கையில் தமிழர்கள் இருந்ததாக பதிவுகள் இருக்கக்கூடாது: அரசாங்கம் தீவிரம் – சாள்ஸ்

291 0

உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கோவிட் தொற்றை காரணம் காட்டி குறித்த நிகழ்வை தடுக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் உரிமை போரின் போது யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு மே மாதம் 18ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் நினைவு கூர்ந்து உறவினர்கள் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ளுவது வழமை.

ஆனால் தற்போது உள்ள அரசாங்கம் யுத்தத்தை வழி நடுத்தி எமது மக்களை கொன்ற அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருக்கின்றது.

அந்த அரசாங்கம் தமிழ் மக்களை முற்று முழுதாக அடக்கி இலங்கையில் தமிழர்கள் என்ற ஒரு இனம் இருந்ததாக ஒரு பதிவுகள் இருக்கக் கூடாது என்ற வகையில் நீண்ட கால திட்டத்தில் செயல் பட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது எதிர் வரும் 18 ஆம் திகதி (மே 18) யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கோவிட் தொற்றை காரணம் காட்டி குறித்த நிகழ்வை தடுக்கும் முகமாக நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

நேற்று இரவு மத குருக்கல் நினைவு கல் ஒன்றை அப்பகுதிக்கு கொண்டு சென்ற போது இராணுவம் குவிக்கப்பட்டதோடு, அங்கு சென்றவர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேற்கொள்ளும் பகுதியில் உள்ள தீபம் ஏற்றும் கல்லினையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

மிகவும் ஒரு அராஜகமாக இனத்தின் ஒரு மனதை மிகவும் நோகடிக்கக் கூடிய ஒரு செயல்பாட்டில் தற்போதைய அரசாங்கமும், பாதுகாப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நடவடிக்கைகளை வண்மையாக கண்டிக்கின்றோம்.சர்வதேச விழுமியங்களுக்கு அப்பாற் பட்ட வகையில் இந்த செயல் பாடுகள் இடம் பெற்று வருகின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக உடனடியாக குறித்த விடயங்களை சர்வதேச ரீதியில், சர்வதேச நாடுகளிடம் முறையிடக்கூடிய சூழ்நிலைகள் இல்லை.

எனினும் அவர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவோம். தொடர்ச்சியாக எமது மக்களை அடக்கு முறைகளுடன் ஆழ நினைப்பதற்கு முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.

எனினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.