நினைவுகள் அகலவில்லை
***** ******
நிராயுதபாணிகளாக வாழும்
எங்கள் மக்களின் வாசல்கள்….!
ஆயுதம் தாங்கிய உருக்களின்
அணிகளுக்கு அஞ்சியே
கடக்கிறது வாழ்வு….!
கோரங்கள் இன்னும் தீரவில்லை…!
நீளும் நினைவுகள் அகலவில்லை…!
நின்மதி வாழ்வு கிட்டவில்லை….!
ஆனாலும் விடுதலைக்
கொள்கைகள் உறங்கவில்லை…!
முள்ளிவாய்க்கால் நெருப்பாறில்
உதிர்ந்துபோன உறவுகளை
நினைந்துருக இடை மறிக்கிறது கூர்வாள்…!
கொடிய மனிதர்களின்
பெருத்த உருவங்கள்
பிறந்துகொண்டே இருக்கிறது….!
முரட்டுக் கரங்களின்
முட்டுக்கட்டைகள் தாண்டி
ஆங்காங்கே எரிகிறது சுடர்
ஒவ்வொரு சுடரும்
ஒட்டுமொத்த உணர்வாய்
ஓங்கிப் பிரகாசிக்கிறது….!
மனிதம் என்பதை மறைத்தபடி…
புனிதம் என்பதைத் தொலைத்தபடி…
காயங்களை ஆற்றிடக்
கயவர்களால் முடியாது!!
பூமிப்பந்தின் எங்கோர் மூலையிலும்
புள்ளியிடப்படும்
“முள்ளிவாய்க்கால் ”
ஈழத் தமிழர்களின்
இறந்த காலத்தையல்ல
அது எதிர்கால
எழுகையையும் தாங்கி…
இதயச் சுவர்களில்
எதிரொலிக்கிறது.
– மோகன் சொரூபி –