இன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண

302 0

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, அரசாங்கத்தால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் மருந்தகங்கள் தவிர்ந்த (பாமசி) வேறு எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்தோடு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வெளியில் செல்லும் நடைமுறை இந்த தினங்களுக்கு, அதாவது இன்று இரவு(13.05.2021) 11 மணியின் பின்னரும் , 14 , 15 மற்றும் 16 ஆம் திகதிகளிலும் செல்லுபடியாகாது.

17 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை அடையாள அட்டை இலக்கத்தின்படி வெளியில் செல்லும் முறைமை அமுலாகும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முழுநேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த 3 நாட்களும் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். அதே போன்று அத்தியாவசிய சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்படும். இவற்றை தவிர்த்து வேறு எந்தவொரு காரணிகளுக்காகவும் எந்தவொரு நபருக்கும் வெளியில் நடமாடுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என பிரதி பொலிஸ்மா அதிபர்  மேலும் தெரிவித்தார்.

இரவு மற்றும் முழுநேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் , மக்களுக்கு அதுபற்றிய தெளிவின்மை காணப்பட்டது. எனவே இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலேயே அஜித் ரோஹண மேற்கூறிய விடயங்களைத் தெரிவித்தார்.