21.12.2016
செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.
தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் விடிவிற்காகவும் நோர்வேயில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அமரர் செ.செல்வராகவன் அவர்களை இன்று நாம் இழந்துநிற்கின்றோம்.
1990 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே கிளைச்செயற்பாட்டாளராக இருந்து, பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தவர்.
இவரது ஆரம்பகாலத்தில் விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப்பிரிவினரால் வெளியிடப்பட்டுவந்த ‘களத்தில்’ பத்திரிகையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தொடங்கி, போராட்டத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்குமான பல்வேறு பணிகளை ஆற்றியவர். தனது சிறப்பான அணுகுமுறைகளின்மூலம் மக்களிடம் பேராதரவும் பெருமதிப்பும் பெற்றவர்.
தமிழர்தம் விடுதலையை முன்நகர்த்தும் முகமாக நோர்வேயில் நடைபெற்ற ஊர்வலங்கள் மற்றும் ஐனநாயகவழிப் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாட்டிலும் பங்குபற்றியவர்.
திறமைமிக்க நாடக நடிகனாக விளங்கிய இராகவன் அவர்கள், மாவீரர்நாள், ‘சுதந்திரதாகம்’ போன்ற நிகழ்வு மேடைகளில் நடித்து அனைவரிடமும் பாராட்டுப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2009 இல் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபின் எழுந்த நெருக்கடிகளையெல்லாம் எதிர்கொண்டு, தொடர்ந்தும் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கைகளை நோர்வேயில் சளைக்காது முன்னெடுத்தவர்.
இத்தகைய ஆற்றலும் விடுதலை வீச்சும்கொண்ட பற்றுறுதிமிக்க மனிதனை தமிழ்மக்கள் இழந்துநிற்கின்றனர். அன்னாரின் இழப்பில் துயருற்று நிற்கும் இவரின் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் அமரர் செ. செல்வராகவன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என்னும் கௌரவத்தை வழங்கி மதிப்பளிக்கப்படுகின்றது.