கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஜப்பான் அனுப்பி வைத்துள்ளது.இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
அந்த வகையில் ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, லக்சம்பர், சிங்கப்பூர், போர்ச்சிகல், ஸ்வீடன், நியூசிலாந்து, குவைத் உள்பட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவி வழங்கியுள்ளன.
அந்த வரிசையில், இந்தியாவுக்கு மருத்துவ நிவாரண உதவிகளை ஜப்பான் இரண்டாவது முறையாக வழங்கியுள்ளது. ஜப்பான் அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ உதவிப்பொருட்கள் இரண்டு விமானங்கள் மூலம் நேற்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்தன.
இந்த எதிர்பாராத மற்றும் கடினமான சூழ்நிலையில் இந்தியாவுக்கு ஜப்பான் துணை நிற்கும். தொடர்ந்து இந்தியாவுக்கு தேவையான உதவிகளை எங்களால் முடிந்த அளவுக்கு வழங்குவோம் என்றும் ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது