நந்திக் கடலே ! நந்திக் கடலே !-அகரப்பாவலன்.

335 0

நந்திக் கடலே ! நந்திக் கடலே !
————————————

நந்திக் கடலே ! நந்திக் கடலே ! – உன்
ஆழத்தில் பதிந்த சோகம் சொல்லாயோ !

வீசும் காற்றே ! வீசும் காற்றே ! – உன்
கந்தக நெடியின் அவலம் சொல்லாயோ !

வன்னி மண்ணே ! வன்னி மண்ணே ! – நம்
மறவர்கள் எரிந்த சாட்சி சொல்லாயோ !

வான வெளியே ! வான வெளியே ! – நீ
அனைத்தையும் பார்த்த உண்மை சொல்லாயோ !

– நந்திக் –

ஆழ்மன வேரதில் பதிவான துயரம்
குருதியில் எழுதிய ஈழத்தின் சரிதம்
முள்ளி வாய்க்காலில் முடிவான மௌனம்
மனிதமே அழிந்த கொடுமையின் உயரம்
– நந்திக் –

எரிதணல் பொழிந்தே வீரரை மாய்த்த
உயிரதை தூசாய் ஊதியே உதிர்த்த
உறவுகள் சிதறிட பொறிதனில் வதைத்த
அரக்கரின் இனவெறி கறை சொல்லாயோ !
– நந்திக் –

மாண்டவர் உடலை தாண்டியே ஓட
உறவுகள் தேடியே கண்களும் நாட
சீறிய குண்டுகள் யாவையும் அழிக்க
வெந்துமே நொந்த துயரம் சொல்லாயோ !
-நந்திக் –

அகரப்பாவலன்.