கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் நடத்துவோர் தொடர்பில் கடும் சட்டம்!

261 0

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லும் ஊழியர்கள் தவிர ஏனையோர் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய கடமைகளுக்காக செல்வோர் தமது கடமைக்கான அடையாள அட்டையை அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் நடத்துவோர் தொடர்பில் கடும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு நேற்று நள்ளிரவு முதல் இந்த சட்ட விதிகள் தீரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதினால் பொது மக்கள் அநாவசியமான பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், மாகாணங்களின் எல்லைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய சேவைகளை வழமைபோன்று பெற்றுக்கொள்ளவதில் எந்தவித தடையும் இடம்பெறாது. இவ்வாறான சூழ்நிலையில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

இவர்கள் சட்டவிரோத குற்றம் புரிந்தவர்கள் என கருதப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சேவை நிறுவனங்களில் பணிகளுக்காக சமூகமளிக்கும் நபர்களுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருக்கும் போது அந்த பிரதேசத்தில் பயணத் தடை முழுமையாக அமுலில் இருக்கும்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் கடமை சார்ந்த விடயங்களுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ அந்த பிரதேசத்தில் இருந்து வெளியே செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.