அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு

253 0

அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்பதால் மே 31 வரை வார இறுதியில் பயணங்களை மேற்கொள்ளவும், உறவினர்களைப் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனவே ஒவ்வொரு மாகாணத்தின் எல்லைகளிலும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற அனுமதி வழங்கப்படாத அதே நேரத்தில் வெளியாட்கள் அந்த பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், சுகாதாரம், பாதுகாப்பு, நீர், தகவல் தொடர்பு, மின்சாரம், ஊடகம் மற்றும் தொடர்புடைய சேவைகள், நீதித்துறை சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காமல் தொடர்ந்து செயற்படும்.