அரசாங்கத்தின் ஆணவமான மற்றும் தன்னிச்சையான நடவடிக்கை காரணமாக இலங்கை கொவிட்டின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிக்கையில்,
அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து நாடு முழுமையாக முடக்கப்படாது என்ற முடிவை எடுக்குமாறு இராணுவத்தளபதிக்கு யார் அழுத்தம் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக சுகாதாரத் துறை கொவிட் தொற்றை குறைப்பது தொடர்பில் விஞ்ஞான அடிப்படையில் முடிவுகளை எடுத்து வருவதாகவும், தற்போது அந்தந்த மாகாணங்களுக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளின் வேண்டுகோள் நாட்டை முடக்க வேண்டும் என்பதாகும் எனவும் அவர் கூறினார். எனினும் இராணுவத் தளபதி அவர்களின் அறிவுறுத்தல்கள் அல்லது கோரிக்கைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில்லை.
அரசாங்கத்தின் இந்த ஆணவமான மற்றும் தன்னிச்சையான நடத்தை காரணமாக இலங்கை கொவிட்டின் மூன்றாவது அலையை எதிர்கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
அத்துடன் கொவிட் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை “சந்தேகத்திற்குரியது” என்றும், உயிரிழந்தவருக்கு வேறொரு நோய் இருந்தால், அது கொவிட் மரணம் அல்ல” என்று இராணுவத்தளபதி கூறிய முந்தைய அறிக்கை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர் தெரிவித்தார்.
பி.சி.ஆருக்காக. 21,000 பேரின் மாதிரிகள் குவிந்துள்ளதாகவும், இது ஒரு மோசமான நிலை என்றும் ஆய்வகங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.