சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய அரசாங்கம் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று துரிதமாக அதிகரித்துவரும் நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளியிட்டுள்ள விசேட காணொளியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நாம் இன்று அபாய சூழ்நிலையை சந்தித்துள்ளோம். மக்களின் சுகாதார விடயங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. கொரோனா தொற்று நாடு பூராகவும் மிக வேகமாக பரவிவருகின்றது. ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சுவாசக் கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. வைத்தியசாலைகளில் கட்டில்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.
இந்த நிலையில் வைத்தியசாலைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. நாம் மிகவும் ஆபத்தான சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். சுகாதார துறையினர் மற்றும் வைத்தியர்களின் அறிவுரைகளுக்கு அமைய சரியான தீர்மானம் எடுக்காது போனால் நாம் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிவரும்.
அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின் பிரகாரம் எமது நாட்டில் நோயாளிகளின் அதிகரிப்பு அதிகமாகவுள்ளது. ஜீன் மற்றும் ஜூலை மாதங்களின் அதிகமான இறப்புக்களை சந்திக்கக் கூடிய நிலை வரும்.
எனவே நாம் இந்த ஆபத்தான சூழ்நிலையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இந்த நேரம் அரசாங்கத்தின் நற்பெயரை பாதுகாப்பதற்கான போராட்டமல்ல. அரசியல் போராட்டமுமல்ல. உண்மையில் இது மக்களை காப்பாற்றுவதற்கான போராட்டம். நாம் அரசாங்கத்தை மாற்றுவதற்கு கோரவில்லை மாறாக அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்திற்கு உள்ள பொறுப்பை நிறைவேற்றுமாறு கோருகின்றோம்.
ஜனாதிபதி, அமைச்சர்கள் இந்த பொறுப்பினை கையில் எடுத்து மக்களை இந்த நோய் பரவிலில் இருந்து காப்பாற்ற வேண்டும். மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.
எனவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால் நாம் பல உயிர்களை இழக்க நேரிடும். ஆகவே அரசாங்கம் தமது பொறுப்பினை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.