குளிர்பான பவுடரில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்தல்

294 0

துபாயில் இருந்து சென்னைக்கு தங்கத்தை குளிர்பான பவுடரில் கலந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககத்துக்கு வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சரக்கக பிரிவுக்கு துபாயில் இருந்து வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அப்போது சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு 4 குளிர்பான பவுடர் பெட்டிகள், உடல் ஆரோக்கிய பொருட்கள் கொண்ட பார்சல் வந்து இருந்தது. அவற்றின் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர்.

அப்போது தங்க கட்டிகளை சிறு சிறு துண்டுகளாக மாற்றி அதை குளிர்பான பவுடர்களுக்குள் மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அந்த குளிர்பான பவுடர்களில் இருந்து தங்கத்தை தனியாக பிரித்தனர். அதில் மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 2½ கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் பார்சலில் இருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து பல வகைகளில் தங்கம் கடத்தி வருவதை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவதால் கடத்தல்காரர்கள் நூதன முறையில் இதுபோல் குளிர்பான பவுடருக்குள் தங்கத்தை சிறு சிறு துண்டுகளாக்கி மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

சென்னை விமான நிலையத்தில் இதுபோல் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்தது இதுவே முதல் முறையாகும். ஆனாலும் சுங்க இலாகா அதிகாரிகள், அதை கண்டுபிடித்து கடத்தல் திட்டத்தை முறியடித்து உள்ளனர்.