இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர். 1967-ம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின்பு கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
1980-ம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெருசலேமை தங்களுடன் இணைத்துக்கொண்டது.
ஜெருசலேம் நகரம் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் பலவும் இதை அங்கீகரிக்கவில்லை.
இந்த சூழலில் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில், யூத குடியேறிகள் தங்களுடையது என்று கூறும் நிலத்தில் இருந்து பாலஸ்தீன குடும்பங்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதை தொடர்ந்து அங்கு சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் போலீசாருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. 3-வது நாள் இரவாக நேற்று முன்தினமும் அல் அக்சா மசூதி பகுதியில் இஸ்ரேல் போலீசாருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் போலீசார் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் போலீசார் பாலஸ்தீனர்களின் மீது ரப்பர் குண்டுகளால் சுட்டதோடு கண்ணீர்புகை குண்டுகளை வீசி எறிந்தனர்.
இதில் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
இந்த மோதலில் நூற்றுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்து, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல் இஸ்ரேல் போலீசார் பலரும் இதில் படுகாயம் அடைந்துள்ளனர்.