கப்பல் வருகிறது செஞ்சிலுவைக் கொடியுடன் !
கூடாரங்களில் …
காயப்பட்டோர் வரிசையாக படுத்திருப்பார்கள் …
காயத்தின் வலிகள் உடலை வாட்டி வதைக்கும் …
கண்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் …
எண்ண அலைகள் புயலாய் வீசும் …
இவர்களுக்கு ஏன் இந்த நிலை ?
இவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள் ?
சிங்கள அரசின் கொடிய குண்டுகள்
பசியெடுத்து நரபலியாடிய விளைவு !
எங்கள் மக்களின் கூடாரங்களில்
தீப்பூக்களைப் போட்டு வாய்க்கரிசி போட்டதின் விளைவு !
பலியெடுக்கப்பட்ட உயிர்கள்
கடற்கரை மணலின் துயில் கொள்ளும் …
வலியுடன் மிஞ்சிய உறவுகள் காயங்களுடன்
வலிசுமந்து காத்துக் கிடப்பார்கள் …
காத்திருக்கும் கண்களின் விழிகள் மூடாது …
காத்திருப்பின் செய்தி வரும்வரை எங்கும் …
ஆம் !
” மாத்தளன் கடற்கரையில் கப்பல் வந்துவிட்டது ”
இந்த செய்தியைக் கேட்டதும் …
வலிகள் பறந்தோடி உற்சாகம் பிறக்கும் …
செஞ்சிலுவைக் கொடியுடன்
மாத்தளன் கடற்கரையில்
காயப்பட்டோரை ஏற்றிச் செல்ல
கப்பல் தரித்து நிற்கும் …
முன்னூறு … நானூறு பேர்கள் மட்டுமே
ஒருசுற்றில் ஏற்ற அனுமதி …
முன்னுரிமையாக அதிகாயப்பட்டோர் …
முடிவெடுப்பது அவர்கள் கையில் …
ஒவ்வொருவராக வண்டியில் ஏற்றப்படும் …
அங்கு…சலனமற்று ஒருவர் படுத்திருப்பார் …
அருகில் உள்ளவர் சொல்வார்
அவர் இறந்துவிட்டார் …இப்படியான
துயரவலிகளும் நிகழும் …
மாத்தளன் கடற்கரை வரும்
செஞ்சிலுவைக் கொடிக் கப்பலின் வருகை
சிங்களத்துக்கும் தெரியும் …
சிங்களத்துக்கு முட்டுக்கொடுக்கும்
சர்வதேசத்துக்கு தெரியும் …
” இது உலகமகா கண்துடைப்பு ”
அடுத்து அங்கு நிகழப்போவது என்ன ?
செஞ்சிலுவைக் கொடிக்கப்பல்
காயப்பட்டோருடன் நகரும் …
அடுத்த கணம் நரபலிக் குண்டுகள்
கூடாரத்தில் வீழ்ந்து உயிர்களைக்
காவு கொள்ளும் …
உயிர்த் துடிப்பின் வலிகளை
சுமந்தபடியே காத்திருப்புக்கள் தொடரும் …
அகரப்பாவலன்.