கந்தர்மடத்தில் பாரிய சுகாதார சீர்கேடு! கண்டுகொள்ளாத யாழ் மாநகரசபையினர்

402 0

யாழ் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையிலிருந்து அரசடி – அம்மன் வீதிகளுக்கூடாக வீரகாளி அம்மன் குளத்தினை சென்றடைகின்ற வாய்க்காலில் ஆயிரக்கணக்கான பிளாஸ்ரிக் பொருட்கள் , குப்பை கூளங்களும் நிறைந்து காணப்படுகின்றன . கடந்த மார்கழி மாதம் பெய்த பாரிய மழையின் காரணமாக அக்குளத்தில் காணப்பட்ட மேற்படி பிளாஸ்ரிக் பொருட்கள் மேற்படி வாய்க்காலுக்குள் புகுந்திருந்தன .

இதன்காரணமாக இப்பகுதியில் நுளம்பு பெருக்கம் அதிகமாகி பல சிறுவர்கள் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியிருந்தனர் . இது தொடர்பாக மேயர் மணிவண்ணனின் நிர்வாகத்தினருக்கு பல தடவைகள் நேரடியாகவும் , சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்கியிருந்தபோதிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை . அத்தோடு நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தக்கூடிய மருந்து விசிறும் செயற்பாடுகளையேனும் இதுவரை காலமும் மாநகரசபையினர் முன்னெடுத்திருக்கவில்லையென்று அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர் .

பெருமளவானோர் நேரடியாக அவதானிப்பர் என்பதற்காக யாழ் மாநகரின் கடைகள் நிறைந்து காணப்படுகின்ற வடிகால்களை சுத்தப்படுத்துவதில் அக்கறை செலுத்திய மணிவண்ணன் தரப்பினர் பொதுமக்கள் வாழ்கின்ற இவ்வாறான வடிகால் , வெள்ள வாய்க்கால்களை சுத்தப்படுத்துவதில் ஐந்து மாத காலமாக எவ்வித அக்கறையும் செலுத்தியிருக்கவில்லையென்று இப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.