ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த தமிழினம். ஆலமரம் போல் வேரூன்றி விழுதுகள் விட்டு வளமோடு வாழ்ந்த எம் மக்கள். அம்மக்களை வதை வதைத்து கொன்று குவித்து அந்த நாளை கொண்டாடியும் மகிழ்ந்தது சிங்கள அரசு.
ஆம் முள்ளிவாய்க்கால் என்ற பெயரைக் கேட்டாலே ஒவ்வொரு தன்மானத் தமிழனின் உதிரமே கொதித்தெழும். மே 18 2009 என்றாலே ஒவ்வொருவரினதும் உயிர் மூச்சும் ஒருகணம் நின்று உயிர் பெறும். உலக நாடுகள் சிலவற்றோடு வளைந்து கொடுத்து அவற்றின் உதவியோடும், கைக்கூலிகளோடும் எமது வீர விடுதலை போராட்டத்தையும் எம்மினத்தையும் அழித்தொழித்தது சிங்கள அரசு.
கொத்துக் கொத்தாக எம் மக்கள் துடிக்கையில் தூரநின்றே எட்டிப் பார்த்தன துணை நின்ற நாடுகள். சொந்த நாட்டிலேயே அகதிகளாக எந்தவித அடிப்படைவசதிகளும் இன்றி நாள்தோறும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் பெண்கள், பச்சிளம்பாலகர்கள் பசியாலே இறந்து போயினர்.குண்டுகள் விழுந்த இடமெங்கும் புகை மண்டலம். இரத்தமும் சதையுமாக எங்கு பார்த்தாலும் அவல ஓலங்கள். குண்டுகள் பாய்ந்து இறந்த காயமடைந்த உறவினர்களைப் பாதுகாக்க முடியாமல் தங்கள் உயிரை பாதுகாக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர் எம் மக்கள்.
விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் முகாம்களிலும் முட்கம்பி வேலிகளுக்குள்ளும் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள். பெண்கள், இளைஞர்கள் கைதிற்குப்பின் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டி இன்று வரையும் போராட்டங்கள் நடந்த வண்ணமே இருந்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமலேயே இருக்கின்றது.கைது செய்யப்பட்டவர்கள் அனுபவித்த கொடுமைகளை வெளி உலக நாடுகள் அறிந்து கொள்ளாமல் இருக்க ஊடகங்களுக்குத் தடைபோட்டு மறைத்தது இலங்கை அரசு. முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட சிலர் “புனர்வாழ்வு” என்ற பெயரால் உலக நாடுகளுக்கு படம் போட்டு காட்டப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்றனர்.
சொந்த நாட்டிலேயே உறவுகளை இழந்து உடமைகளை இழந்து இன்று சொந்த உரிமைகள் கூடக்கிடைக்காத நிலையில் தவிக்கிறது எம் இனம்.விடுதலை வேட்கையை நெஞ்சில் சுமந்து வீரத்தலைவனின் ஆணை ஏற்று தமிழ் மண்ணை மீட்கப்புறப்பட்டவர்கள் பலர் இன்று வாழ்வாதாரத்திற்கே போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் மடிந்த எமது மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே கட்டப்பட்ட நினைவுத்தூபியைக்கூட இலங்கை அரசாங்கம் இடித்தழித்தது. இளைஞர்கள், மாணவ சமுதாயம், உணர்வுள்ள அனைத்துத் தமிழ் மக்களினதும் போராட்டங்களால் அத் தூபி மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
முள்ளிவாக்கால் வரை தமிழின உணர்வோடும் தமிழ்மண் உணர்வோடும் இருந்தவர்களின் தியாகங்கள் என்றும் மறக்க முடியாத காவியங்கள்.
கீர்த்திகா சிவகுமார் (என்னெப்பெற்றால் தமிழாலய மாணவி)