எரிகுண்டில் கருகிய கூடாரங்கள் !-அகரப்பாவலன்.

393 0

எரிகுண்டில் கருகிய கூடாரங்கள் !

தமிழரின் வாழ்வியலில்
ஓர் ஏழைக்குக் கூட
ஒரு வளவும் குடிசையும் இருக்கும் …
அதில் … சுதந்திர வீச்சோடும்
சுந்தரத் தமிழோடும்
ராஜாங்கம் நடத்துவார் … அங்கு
ஓர் மனநிறைவான வாழ்வு நிகழும் …

அன்று …முள்ளிவாய்க்காலில்
சொந்த மண்ணிலேயே அகதிகள் போல்
எந்த வசதியும் இல்லாமல்
பிளாஸ்ரிக் விரிப்புக் கூரைக் குடிசையில்
ஒடுங்கி வாழும் நிலை ஏற்பட்டது …

வெயில் வஞ்சனை செய்யாமல்
கொளுத்தியடிக்கும் …
பிளாஸ்டிக் விரிப்புக் கூரை
வெப்பத்தை உறிஞ்சி உமிழும்
குடிசையில் இருப்பவர்கள்
போறணையில் அகப்பட்ட பொருட்களாகி
வெந்து ,நொந்து ,உருகுவார்கள் …

இதில் …
குழந்தைகள் ,முதியோர் என
பட்டியல் நீளும் …
தாகம் தீர்க்க வைத்திருந்த நீரை
கூரையை நோக்கி தெளிப்பார்கள் …
சற்று ஆறுதல் கிடைக்கும் …
இரவு எப்பொழுது வரும்
என ஏங்குவார் …
இரவின் குளிர் சற்று ஆறுதல் தரும் …

இவைகளைத் தாண்டி
குண்டுத் தாக்குதல் நிகழும் …
கூடாரத்தில் விழாதவரை விதி வெல்லும் …
சிலசமயம் கொடும் அரக்கனான
“பொஸ்பரஸ் குண்டு “எகிறி விழும் …

அந்தவேளை …
பிளாஸ்டிக் விரிப்புக் கூரை
உருகி மக்கள்மேல் விழும்
நெருப்பு பொறியில் அகப்பட்ட
எலிகளை போல் பொசுங்கி
துடி துடித்து கருகிப்போனார்கள் …

கருகிக் கிடந்த பிணக்குவியல்களைக் கண்டு
உருக்கொண்டு வெற்றித் திருநடனம்
ஆடியது சிங்களம்…
பெருநிதி கொடுத்து உருவேற்றிய வல்லரசுகள்
அருமை அருமை என்று வாழ்த்துரைத்தது …

போர்க்குற்றம் இங்கு நிகழவில்லையாம் …
பாரில் இதற்கு சாட்சியில்லையாம் …
குற்றவாளிகள் எப்படி நீதிபதிகளாக முடியும் ?

அகரப்பாவலன்.