09.05.2009 அன்று செல்தாக்குதல்களில் கொல்லப்பட்ட தமிழர்கள் அவ் இடங்களிலேயே எரிக்கப்பட்ட அவலம்-வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள்.

374 0

தமிழீழம்
மே 09 2009
சனிக்கிழமை காலை 7 மணியளவில் சிங்கள பேரினவாத அரசால் நடாத்தப்பட்ட செறிவான செல்தாக்குதலால் சுமார் 50 மேற்பட்ட கடுமையான காயக்காரர்கள் மட்டும் தற்காலிகமாக இயங்கும் சிறிய பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார்கள். சுமார் 165000 வரையானவர்கள் 8 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட சிறிய நிலப்பரப்புகள் பேரினவாத சிறிலங்கா படைகள் தங்களது முழு சூட்டு வலுவையும் முடுக்கிவிட்டிருந்தது இது சர்வதேச்திற்கு சிறிலங்கா வழைங்கிய உறுதி மொழிக்கு எதிரானதாக இருந்தது.

அதே வேளை 120,000-165,000 உட்பட்ட மக்கள் வசிக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்ட வன்னிப்பகுதியில் (முள்ளிவாய்க்கால்) ஊட்டச்சத்து குறைபாட்டால் கர்ப்பிணி பெண்களும் பாலுாட்டும் தாய்மாரும், வயது முதிர்ந்தவர்களும் பெரும் இன்னல்களை சந்தித்தார்கள், கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய் மாரும் அந்த சிறிய பாடசாலையில் இயங்கும் வைத்தியசாலையில் தங்களுக்கு பால்மா வழங்குமபடி வைத்தியர்களை கெஞ்சிக் கொண்டிருந்தார்கள் வைத்தியசாலையிலோ அத்தியவசிய பால்மா, மருந்துகள் என எவையும் இருப்பில் இல்லாததினால் வைத்தியர்களும் தன்னார்வலர்களும் எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் இருந்தனர்.

வன்னிக்கு 30 மெ.ரொன்(metric ton)பொருட்களை அனுப்புவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தலை வெளியிட்ட போதும் திருகோணமலையில் உள்ள கடற்படையினர் ஐ.சி.ஆர்.சியின் கப்பலிலிருந்து 5 மெ.ரொன்(metric ton)உள்ளுர் ஊட்டச்சத்து மா பைக்கற்றான ’சமபோசாவை’எடுத்துக்கொண்டது என கொழும்பிலிருந்து செயற்படும் பணியாளர் தகவல் தெரிவித்தனர்.