முதியோரை அழுத்திய துயர வலிகள் !
அன்று …
தமிழீழ நிழல் அரசின்
காப்பகம் இருந்த நேரம் …
முதியோர் மனநிறைவின்
உச்சத்தில் இருந்த காலம் …
இறுதி மூச்சுவரை
வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும்
சுவைத்து மகிழ்ந்த காலம் …
அவர்கள் ஒவ்வொருவரும்
தேசத்தின் உறவுகளாய்
மதிக்கப்பட்ட நேரம் …
ஆனால் …
போரின் உச்ச நேரத்தில்
கடும் வெயில் …உக்கிர வெக்கை
இவைகளையும் மேவி
குண்டுகளின் பேரிடியின் அதிர்வு
இதயத்தின் சுவர்களில் மோதி
இதயத் தொனியைக் கூட்டும் …
நோய்க் கிருமிகள்
நலிந்த உடல்களில் ஏறி நர்த்தனமாடும் …
காயப்பட்ட முதியோர்கள்
இரத்தம் வருவதை தடுக்க
முதலுதவியாக கடற்கரை மணலை
பூசிக்கட்டிக் கொண்டு
வைத்தியசாலை நோக்கிச் செல்லவார்கள் …
வைத்திய சாலையும் போரின் வலிசுமந்து
இடிபாட்டுடன் இருக்கும் …
சிறிய அறுவைச் சிகிச்சைகள்
விறைப்பூசியின்றி நடக்கும் …
சிலசமயம் செல்வந்து விழும் …
உயிர் தப்புவது யார் கையிலும் இல்லை …
உயிரின் பெறுமதி மலிவு விலையில்
என்பதே விதியாகி நாட்களோடும் …
பசித்தீ …
ஏழை ,பணக்காரன்
முதியோர் ,இளையோர்
போர் ,சமாதானம்
இவைகளைப் பார்த்து வராது …
பசித்தீயும் பரவி முதியோரை
வாட்டி வதைத்து பிழியும் …
கடற்கரையில் வலைவீசப்படும்
மீன்களுடன் மனிதக்கழிவுகளும்
கூடவே வரும் … அதில் தெரிவு செய்த மீன்களே
உணவாக மாறும் …
வாழ்வா ? சாவா ? என்ற மனநிலை
இவைகள் அனைத்தையும்
கடந்து செல்லும் …
வலிதந்தவர்கள் இன்றும்
மார்தட்டிச் சிரிக்கிறார் !
வழி பிறக்காதா என்று
துயர்கட்டி நிற்கிறோம் !
“காலம் பதில் சொல்லும் ”
அகரப்பாவலன்.