பெருந்தோட்ட “கைக்காசு” தொழிலாளர்களுக்கும் 1000 ரூபா வேதனம் வழங்க உத்தரவு

275 0

பெருந்தோட்டங்களில் பதிவுசெய்யப்படாமல் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கும், நாளாந்த வேதனமாக 1000 ரூபாய் வழங்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு, தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெருந்தோட்டங்களில், பதிவுசெய்யப்படாமல் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு, நாளாந்த வேதனமாக, 1,000 ரூபா வழங்கப்படுவதில்லை என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தொழில் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் தொழில் ஆணையாளரால், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நேற்றைய தினம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலாக்கப்பட்ட தேயிலை மற்றும் இறப்பர் துறைசார் தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான வேதன நிர்ணய சபையின் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை, இந்தக் கடிதம் மூலம், தொழில் ஆணையாளர், பெருந்தோட்ட நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

இதன்படி, பதிவுசெய்யப்படாத அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்த வேதனத்தை வழங்க வேண்டும் என்று தொழில் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இதனை தங்களின் அனைத்து பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்று முதலாளிமார் சம்மேளனத்திற்கு தொழில் ஆணையாளர் அறியப்படுத்தியுள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி, நுவரெலியா, பதுளை, ஹட்டன், அப்புத்தளை, காலி மற்றும் மாத்தறை பிராந்தியங்களின் உதவி தொழில் ஆணையாளர்களுக்கும் இந்தக் கடிதத்தின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.