கொடுத்த விலைகள்!-வன்னியூர் குருஸ்-

358 0

கொடுத்த விலைகள்!
**** ****
குண்டு பட்டுக் குடல் கிழிந்து
நிகழ்ந்ததங்கே பிரசவத்திற்கு முந்திய பிறப்பு…!
குடித்த பால் குருதியாக நரம்பேறமுன்னே
துடித்து உயிர்போனதெம் குழந்தைகள் இறப்பு…!

பெற்ற மனங்களின் பெருந் தவிப்பும்…
உற்ற உறவுகளின் உயர்த் துடிப்பும்…
காக்க முடியாது கரைந்து போயிற்று..!
பார்க்கவே இயலாது மறைந்தும் போயிற்று…!

சிறுவர் நலன்காக்கும் உலக அமைப்பெல்லாம்
அன்றங்கு சிங்களம்
சிறுவர் உயிர்குடிக்கச் சித்தமாய் இருந்தது…!

இருகை கூப்பி மன்றாடி இருங்களிங்கே எம்மோடு என்றதுபோதும் உதறிவிட்டு
வருமிந்த நிலையென்று முன்னறிந்தும் எதிரிக்கு
துணைபோல் கண்மூடி
போனார்கள் எமைவிட்டு.

-வன்னியூர் குருஸ்-

இது எங்கள் வலி!
** *** ***
விழுந்து விழுந்து எழுந்து நடந்து
இறுதி நாட்களை எட்டும் பொழுதிலே…
எலும்புந் தோலுமாய் ஆகினர் எங்களின்
விழுதுகள் என்கின்ற தலைமுறைக் குஞ்சுகள்!

கஞ்சி கொடுக்க ஐந்தரிசி அற்றுப்போக….
இஞ்சிக்கோர் எறிகளை விழுகின்ற இடத்திலும்
எஞ்சிய பிஞ்சுகளின் உடல் நலன்காக்க
காய்ச்சிய நீரை ஊற்றி உயிர்காத்தோம்…!

சிங்களமே…!!

இன்றும், இதற்குப் பின்னும் சொல்கிறோம்
என்றும் நாங்கள் இதைத்தான் சொல்வோம்
இவர்கள் மனதில் இன வெறியேற்றும்
எந்த மருந்தையும் கொடுப்பதே இல்லை.

-வன்னியூர் குருஸ்-