தொலைத்தோம் திருவிழாவில் இல்லை … போரின் வெளியில் !
நல்லூர்த் திருவிழா …
வற்றாப்பளை அம்மன் திருவிழா …
மடுமாதா திருவிழா …
இப்படி எத்தனை திருவிழாக்கள் …
ஊரும் உறவுகளும் ஒன்றுகூடும் சங்கமம் …
நமது பண்பாட்டு விழுமியங்களின் வெளிப்பாடு …
கலைபண்பாட்டின் பதிவுகள் …
மக்கள்வெள்ளம் மகிழ்வில் கரைபுரண்டோடும் …
அதில் பண்பாடு காக்கப்படும் …
உறவுகள் போற்றப்படும் …
தமிழரின் காதலும் ,வீரமும்
இரு கண்களாக ஏற்றப்படும் …
அன்றும் தொலைத்திருக்கிறோம்
பண்பாட்டையல்ல துன்பத்தை …
தொலைத்திருக்கிறோம் …பிள்ளைகளை
ஒலிபெருக்கி மீட்டுத்தந்துவிடும் …
ஆனால் …முள்ளிவாய்க்காலில்
தொலைத்தது என்ன ?
பெண்கள் அடைந்த துயரம்
விண்ணின் விரிவைத் தாண்டிச் செல்லும் …
சுற்றிவளைத்த தீக்குண்டுகள்
பரவியோடும் மக்களை ஒன்று திரட்டி
சிங்களப் பொறிக்குள் தள்ளும் …
பெண்களின் இயற்கைச் சுற்றின் உபாதை ஒருபுறம் …
வெட்ட வெளியில் இயற்கை கடன் முடிக்கும் கொடுமை ஒருபுறம் …
இனவெறி ராணுவத்தின் கொடூர பார்வையின்
காமத்தீ ஒருபுறம் …
பெண்களை மந்தைகளாக அடித்து விரட்டும்
காட்டுமிராண்டித்தனம் ஒருபுறம் …
பசிபட்டினி ஒருபுறம் …
கவுரவம் ,பண்பாடு , இறைமை அழிக்கப்பட்ட நேரம் …
அடிமைகளைவிட மோசமாக நடத்தியது
சிங்கள இனவெறியின் திமிர் !
இவைகள் மட்டுமா ?
பகிரமுடியாமல் இதய அறையில் பூட்டிவைத்து
வெம்பித் துடிக்கும் கொடூரங்கள் எத்தனை !
இவைகள் அதில் ஒரு துளி மட்டுமே …
இவைகளையும் தண்டி ………
பிள்ளைகளை தொலைத்தோர் …
கணவனை தொலைத்தோர் …
உறவுகளைத் தொலைத்தோர் …
தொலைப்பின் பட்டியல் நீளும் …
அன்று நாம் அனைத்தையும்
தொலைத்து நின்றோம் …
இன்று தொலைத்தவைகளை
மீட்கத் துடிக்கிறோம் …
இன்னும் நீதியின் கண்கள் மூடித்தான் இருக்கிறது .
அகரப்பாவலன்.