முள்ளிவாய்காலின் 12ஆம் ஆண்டு நினைவு நாட்களி ல் உலகப்பரப்பில் ஈழத்தமிழர் இனப்படுகொலையை கனடாவின் பாரிய மாநிலமான ஒன்ராரியோ பாராளுமன்றம் மே 6ஆம் நாள் வியாழக்கிழமை 3ஆம் இறுதி வாசிப்பை மேற்கொண்டு விவாதித்து அனைத்துக்கட்சிகளும் ஏகோபித்து வாக்களிக்க தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக அங்கீகரித்து வரலாறு படைத்துள்ளது.
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான இளையவர் விஜய் தணிகாசத்தினால் 2019 இல் தனிநபர் சட்டமூலமாக கொண்டுவரப்பட்ட இச்சட்டமூலம் முதலாம் இரண்டாம் வாக்கெடுப்புகளின் பின் இறுதியும் மூன்றாவதுமான வாசிப்பும் வாக்கெடுப்பிற்கு முன் அது குறித்த பாராளுமன்ற குழுவிற்கு அனுப்பப்பட்டது. அவ்குழுவின் பரிந்துரையின் கீழ் அச்சட்டமூலம் மே 6ஆம் நாள் வியாழக்கிழமை மீண்டும் இறுதி வாசிப்பிற்கும் வாக்கெடுப்பிற்குமென எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது குறித்த விவாதத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித்தலைவர் உட்பட தமிழினப்படுகொலை குறித்தும், ஈழத்தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் உரிமை மறுப்புகள் குறித்தும் விரிவாக பேசினர். இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவது ஈழத்தமிழ் மக்களுக்கு ஒருவிதத்தில் ஒரு பரிகாரநீதியாக அமையும் என்பதை வலியுறுத்தி தமது ஏகோபித்த ஆதரவை சட்டமூலத்திற்கு அனைவரும் வழங்கினர்.
ராணியின் ஒப்பம் பெறப்பட்டதும் உத்தியோகபூர்வமாக இது சட்டவரைபில் இணைந்துவிடும். இதன்பிரகாரம் மே 18ஜ முதன்மைப்படுத்திய 7 நாட்கள் ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாகக் கொள்ளப்படும். இந்நாட்களில் இனப்படுகொலை குறித்த பல அறிவூட்டல் விடயங்களை முன்னெடுக்கும் பாரிய பொறுப்பு ஒன்ராரியோ வாழ் ஈழத்தமிழ் மக்களுக்கு குறிப்பாகவும், உலகலாவிள தமிழ் மக்களுக்கு பொதுவாகவும் அமைகிறது.
வடமாகாணசபை, தமிழக சட்டசபை ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானங்களைக் கடந்து வெறும் தீர்மானமாக அமையாமல் ஒரு சட்டவரைவு மூலம் ஒரு சட்டமாக உலகப்பரப்பில் தமிழின இனப்படுகொலை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது, வரலாற்றில் முக்கிய ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது எனலாம். இது உலகபரப்பில் ஏனைய நாடுகளிலும் நகரசபைகள், மாநகரசபைகள், மாநில பாராளுமன்றங்கள், நாட்டு பாராளுமன்றங்கள் என இனப்படுகொலையை அங்கீகரிக்க வைப்பதற்கான கதவுகளை தற்போது அகலத்திறந்துவிட்டுள்ளது.
இதற்கான முயற்சியில் இறங்கிய ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினர் இளையவர் விஜய் தணிகாசலம் மற்றும் இதற்காக தொடர்ந்தும் தம் பணியாற்றிய அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.