பதுங்கு குழியில் …மரணத்தின் பிடியில் -அகரப்பாவலன்

426 0

நிலத்தின் அதிர்வுகள்
குண்டுத் தாக்குதலின்
வலுவின் சக்தியை
நிலைநாட்டி நிற்கிறது …
மௌனம் …மௌனம் …
பதுங்கு குழியில்
வேறு என்னதான் செய்யமுடியும் …
இது போர் தந்த வலியின் நிலவறைக் குடிசை …
அதுதான் அன்றைய நிலையின்
“காவல் சாமி “

நாற்சதுர வீடு கட்டி
தேக்கும் ,முத்திரையுமாய் கதவு வைத்து …
நாற்புறமும் வேலி போட்டு …
வீட்டைச் சுற்றி தெங்கு நட்டு
முக்கனிகள் பழுத்துத் தொங்க
சோலைக் காற்றில் ஊஞ்சலாடி …
கொண்டு ,கொடுத்து
வாழ்ந்த தமிழினம் …

பதுங்கு குழிக்குள் உயிர்த்தவம் செய்த நேரம் …
கந்தக நெடில் மண்ணோடு கலந்து
பதுங்கு குழிக்குள் வாசம் செய்ய வரும் …
பூரானும் ,தேளும்
புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும் …
சிலசமயம் சாரையாரும் தலைநீட்டிப் பார்க்கும் …
விளக்கு போட்டால் …

விளக்கே ஆள்கட்டியாக மாறும் நிலை …
பற்றி எரியும் வன்னிமண்ணின்
நெருப்பை அணைக்கத் துடிக்கும் வான்மழை …
மழைநீரில் ஓட்டம் பதுங்கு குழிக்குள்ளும்
தன் ஈரநெஞ்சை நனைத்துச் செல்லும் …
தேசவிடியலைத் தேடிய கண்கள்
வானின் விடியலை தேடி ஏங்கும் …
பரவி விழும் குண்டுகள் ஓயாதா
என மனம் எங்கும் …

நெஞ்சு நிறைய சோலைக் காற்றை
சுவாசித்த சுவாசப்பைகள்
நெருக்கி அமர்ந்த உறவுகளின்
கரிய சுவாசத்தையும் ஏற்கும் நிலை … ஆம் …
அவர்கள் உயிரோடு இருக்கும் போதே
அவர்களின் சுவாசத்தில் கலந்திடும் பாசநிலை …

பதுங்கு குழியின் பலமும் தரமும்
உயிர் காக்கும் அரணாய் மாறும் …
ஆனால் குண்டின் பலம் …
சர்வதேசக் கூட்டாளிகளின் பலம் அல்லவா !
வாரி வழங்க சர்வதேசம் … – குண்டை
அள்ளிச் சொரிய சிங்கள தேசம் …
வன்னிமண்ணின் ஒவ்வொரு அங்குலமும்
சிங்களக் குண்டுகளின் இலக்குத்தான் …

ஒவ்வொரு கணப்பொழுதும் உயிர் பறிபோகும் நிலை
சாவின் வாசலை திறக்கப் போகும் கணப்பொழுது எது ?
இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் துடி துடிக்கும் நிலை …
கிபீரின் சத்தம் ஓய்ந்தால் …மனதில் உயிர் பூக்கும் …
கிபீரின் சத்தம் ஓங்கினால் … இதயத்து சுவரில்
இரத்த அணுக்கள் உதைக்கும் கொடூரம் தொடங்கும் …
பதுங்கு குழிக்குள் வாழ்வா ? சாவா ? என்ற
மனப்போராட்டம் உச்சம் தொடும் …

வாழ்வும் ,சாவும் ஒன்றாய் காணும் சமநிலை தோன்றும் …
முடிவு எதன் கையில் ?
அது யாராலும் புரியமுடியாத தேடலின் தொடர்ச்சி …

இது பதுங்கு குழியில் உயிர் தப்பியவர்களின்
அனுபவப்பதிவு .

அகரப்பாவலன்