சென்னை ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அபாயம்

316 0

சென்னையில் உள்ள பெரிய தனியார் மருத்துவ மனைகள் அதிக விலை கொடுத்து ஆக்சிஜன் வாங்கி தங்களது தேவையை சமாளித்து வருகின்றன.கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் தேவை முன்பு இருந்ததை விட அதிகமாக அதிகரித்து உள்ளது.

கொரோனா முதல் அலையில் ஆக்சிஜன் தேவை 10 சதவீதம் அளவுக்கு இருந்தது. ஆனால் தற்போது 2-வது அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 60 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது.

நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு தேவை திடீரென அதிகரித்ததால் உற்பத்தி இல்லாத காரணத்தால் மிக கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. வட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிர் இழந்தனர்.

நேற்று செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட அழுத்தம் குறைபாடுகள் காரணமாக 13 பேர் உயிரிழக்க நேரிட்டது. இதேபோன்று ஆக்சிஜன் தட்டுப்பாடு அனைத்து மாநிலங்களிலும் நிலவுவதால் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தினமும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 400 டன் ஆக்சிஜன் வாங்கப்படுகிறது. ஆனால் இது தற்போது எழுந்துள்ள அதிக தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. கடந்த மாதம் வரை தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை 250 டன்னாக இருந்தது. ஆனால் தற்போது அது இரட்டிப்பாகி தினசரி தேவை 500 டன் ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. சிறிய அளவிலான தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் இந்த தட்டுப்பாட்டை எதிர்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பெரிய தனியார் மருத்துவ மனைகள் அதிக விலை கொடுத்து ஆக்சிஜன் வாங்கி தங்களது தேவையை சமாளித்து வருகின்றன. உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து ஆக்சிஜனை பெறுவது மிகப்பெரிய சவாலானதாக மாறி இருக்கிறது.

இதனால் தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் கிடைக்காமல் திணற தொடங்கி உள்ளன. கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 22 ஆயிரத்தையும் நெருங்கி விட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினமும் சுமார் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா நோயாளிகளில் பெரும்பாலானவருக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை உள்ளது. அரசு மருத்துவ மனைகளின் படுக்கைகள் ஆக்சிஜன் வசதிக்கு மாறி இருப்பதால் புதிதாக பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீத கொரோனா நோயாளிகள் படுக்கையும் கிடைக்காமல், ஆக்சிஜனும் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள்.

தற்போதுள்ள சூழ்நிலைபடி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கி இருக்கிறது. அடுத்த 10 முதல் 15 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவுக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இத்தகைய அபாயத்தை தவிர்க்க வேண்டுமானால் கொரோனாவால் தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படாவிட்டால் அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவையை எதிர்கொள்ள இயலாது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் டாக்டர்கள் இப்போதே தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

சென்னையில் தற்போது தனியார் மருத்துவமனைகளில் 150 முதல் 300 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தேவையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு 8 முதல் 10 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. லாரிகளில் ஏற்றி வரப்படும் ஆக்சிஜனை நம்பியே அவர்களின் மூச்சு உள்ளது.

ஆனால் ஆக்சிஜனை பெறுவது என்பது நாளுக்கு நாள் மிகப்பெரிய போராட்டமாக தனியார் மருத்துவமனைகளுக்கு மாறி உள்ளது. இதுபற்றி அரசு அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகிறார்கள். மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.