செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைத்தியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

279 0

கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இதேநிலை நீடிக்கிறது.

தமிழகத்திலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 23 ஆயிரத்து 310 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 167 பேர் இறந்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லி, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

கோப்புப்படம்

தற்போது செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் உயிரிழந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நேற்று மட்டும் 1,755 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெருந்தொற்று உள்ளவர்களுக்கு மட்டும் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால் பதற்றம் அடைந்த டாக்டர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் உதவியை நாடியதாக தெரிகிறது. ஆனால் அங்கும் குறைந்த அளவிலேயே ஆக்சிஜன் இருப்பதாக கூறி ஆக்சிஜன் வழங்க மறுத்து விட்டனர்.

இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் அடுத்தடுத்து 13 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

இதனை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவத்தால் சக நோயாளிகள் அச்சத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆக்சிஜன் சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு புகார் வந்தது. அதை தொடர்ந்து நான் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் ஆக்சிஜன் செல்லும் குழாயில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 13 பேர் உயிரிழந்து விட்டனர்.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 23 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்கர்கள் உள்ளது. ஆஸ்பத்திரியில் நாளொன்றுக்கு 2.9 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. நேற்று முன்தினம் நோயாளிகளின் வருகை அதிகமானதால் 4.5 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜன் செலவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 447 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இறந்தவர்களின் உடல்களை ஆஸ்பத்திரி நிர்வாகம் அவசர கதியில் உறவினர்களிடம் ஒப்படைத்தது.

உடல்களை பெற்றுக்கொண்ட உறவினர்கள் அங்கிருந்து கிளம்பினால் போதும் என புறப்பட்டு சென்றனர். இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து அங்கு பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

அனைவரும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

போராட்டம் குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே 13 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்கக்கோரியும் டாக்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு உதவி கலெக்டர் சுரேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. மதியம் மருத்துக்கல்லூரி இயக்குனர் நாராயணபாபு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

டாக்டர்களின் கோரிக்கைகள் ஒரு வார காலத்திற்குள் சரிசெய்யப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.