தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். அதேசமயம், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபர்கள், முறைகேடான வகையில் பணத்தை புதிய நோட்டுக்களாக மாற்றுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர். இதில் புதிய ரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி பழைய நோட்டுக்களும் சிக்குகின்றன.
தமிழகத்திலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையில் தொழிலபதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், ரூ.100 கோடிக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்திவருகின்றனர். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலும், அவரது மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், ராம மோகன ராவுக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் வீடுகள் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராம மோகன ராவ், ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழக வேளாண்மைத்துறை, சமூக நலம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.