யார் வரைந்த கரை.-வன்னியூர் குருஸ்-

508 0

யார் வரைந்த கரை.
*******
உலக முடிவின் ஒரு
கரையா இது…?
உலக அரங்கின் ஒரு திரையா இது?
பக்கங்களைப் புரட்டிக் கவிழ்த்து வைத்த
புத்தகங்கள் போல தெரிகிறதே….!
உலகப் புத்திசாலிகளால் எழுதிய ஒரு கதையா இது?

வாஸ்கொடகாமாவே வந்துபார்…!
பாஸ்போட் இல்லாது பயணித்தவனல்லவா நீ…!
கொலம்பசே உனக்கும் பாதை தெரியாதா….?
கொலைக்களத்தின் குப்பைமேட்டை கண்டுபிடிக்க.

புதிதாய் யாரும் இல்லையோ எங்கள் இனம்பட்ட
பரிதாபத்தைப் பார்த்திட..!
விதிதான் என்றே எண்ணிடோம் நாங்கள் தினம்பட்ட வேதனை
சதிதான் என்றே எண்ணுவோம்.

– வன்னியூர் குருஸ்-

இதையுமா இலக்கு வைத்தாய் பகைவா.
********
பொன்னிலும் பெறுமதியாய் நெல்மணிகள் ஆனதங்கே…!
கண்ணிலும் தென்படாத தீவனமாய்ப் போனதங்கே..!
எண்ணிடா வேதனைகள் யாரிடம் கூறுவதோ…!
கண்ணுறாக் காட்சிகளை புண்களால் பார்க்கிறதே.

நடை பயணத்தின் எல்லை முடியும் கரை அருகிலே கஞ்சிக்காய் பிஞ்சுகள்…!
அட இதைக்கூடவா இலக்கு வைத்தாய் பகைவா
உன்னை எவனுக்கு ஈடு சொல்ல…?

கால்நடைகள் கண்ட கானல் நீர்போல
கால்வயிறு கொண்ட பசியும்
தீராது தீர்த்தாயே ….!
நீயெல்லாம் ஒரு கர்ப்பப் பிறவியா…?

தீயெரிந்த தாய் நிலம்.
**** ** ***
பேயுருவம் கொண்டங்கே புரண்டெழும்
பகைவனைப் பார்…!
தாயோடு பிஞ்சுகளையும் தனக்கிரையாகத் தின்றதைப் பார்…!

போயினிப் பார்த்திடவே முடியாத வேதனையில்
வாயுரத்து கதறியோடும் வாட்டமுற்ற உறவினைப்பார்,,,.!

தீயவர்கள் தீயதாய் எரித்துவரும் போதினிலே
தேறியவர் தனிமரமாய் ஆனதுதான் எம் கதையோ..?

– வன்னியூர் குருஸ்-