பணத் தட்டுப்பாட்டையும், மக்களின் அவதியையும் போக்க வேண்டும்

274 0

201612210858220776_ramadoss-request-shortage-of-money-and-people-problem_secvpfபுதிய ரூபாய் தாள்களை அதிக அளவில் வெளியிட்டு பணத் தட்டுப்பாட்டையும், மக்களின் அவதியையும் போக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 தாள்களை வங்கிகளில் செலுத்த புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன. இவை வங்கிகளில் பணம் செலுத்த செல்வோரை குற்றவாளிகளாக பார்க்கும் செயலாகும். அதுமட்டுமின்றி, இத்தகையக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் மத்திய அரசிடம் அளவுக்கு அதிகமான பதற்றம் தெரிவதையும் பார்க்க முடிகிறது.

மத்திய அரசு எதிர்பார்த்தவாறு, சொல்லிக்கொள்ளும் வகையில் கருப்புப் பணம் பிடிபடப்போவதில்லை. காரணம் கருப்புப் பண முதலைகள் அனைவருமே தங்களிடம் இருந்த பணத்தை உரியவர்களின் உதவியுடன் வெள்ளையாக மாற்றிவிட்டனர். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளாமல் கொஞ்சமாவது கருப்புப் பணத்தை பிடித்துவிட்டதாகக் காட்டிக்கொள்ளத் துடிக்கும் மத்திய அரசு, அதற்காக இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.500 தாள்களின் மதிப்பை திடீரென ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துக்காட்ட முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. பழைய ரூபாய் தாள்களை வங்கியில் செலுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் கூட இதை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கலாம் என்ற ஐயத்தையும் புறந்தள்ள முடியவில்லை.

வங்கிகளில் இம்மாத இறுதிவரை ஒரே ஒருமுறை மட்டுமே ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் பணம் செலுத்த முடியும்; அவ்வாறு செலுத்த வருபவர்களிடம் வங்கி அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி முழு திருப்தி அடைந்தால் மட்டுமே பணத்தை பெற்றுக்கொள்ளும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. வங்கிக்கு வருபவர்களை வாடிக்கையாளர்களாக பார்க்காமல், குற்றவாளிகளாக நினைத்து விசாரிப்பது முறையல்ல. வங்கிகள் வங்கிகளாக இருக்க வேண்டுமே தவிர காவல்நிலையங்களாகவோ, நீதிமன்றங்களாகவோ மாறக்கூடாது.

கருப்புப் பண முதலைகள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில், அதிகாரிகள் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதை தடுக்காத அரசு, ரூ.5 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வருபவர் களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவறு; இதை கைவிட வேண்டும். கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நாளில் ரிசர்வ் வங்கி ஆளுகையில் இருந்த பணத்தின் மதிப்பு குறித்து முன்னுக்குப்பின் முரணான கருத்துகள் வெளிவந்துள்ள நிலையில், அது குறித்த உண்மை நிலையை மத்திய அரசு விளக்க வேண்டும். அத்துடன், புதிய ரூபாய் தாள்களை அதிக அளவில் வெளியிட்டு பணத் தட்டுப்பாட்டையும், மக்களின் அவதியையும் போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.