சிறுபான்மையினருக்கு பாதுகாவல் அரணாக விளங்கும் கட்சி தி.மு.க

314 0

201612210916335289_dmk-security-for-minorities-mk-stalin-speech_secvpfசிறுபான்மையினருக்கு பாதுகாவல் அரணாக விளங்கும் கட்சி தி.மு.க. என்று சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை அடையாறில் உள்ள புனித லூயிஸ் காது கேளாதோர் பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்புரையாற்றினார். சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா இறைவாழ்த்து கூறி விழாவினை தொடங்கிவைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தென்னிந்திய திருச்சபை சென்னை பேராய துணை தலைவர் பால் தயானந்தன், ராமகிருஷ்ணா ஆசிர மத்தின் செயலாளர் வரதானந்தா, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் முத்துகிருஷ்ணன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிறுவன தலைவர் தெகலான் பாகவி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்பட ஏராளமானோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவிற்கு தலைமை தாங்கிய மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி மேடையில் இருந்தவர்களுக்கு ஊட்டினார்.

பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-தி.மு.க.வை பொறுத்தவரை யில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழை- எளிய மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூக மக்களுக்கு என்றைக்கும் பாதுகாவல் அரணாக விளங்கிகொண்டிருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றைக் கும் சிறுபான்மை சமூகத்துக்கு குரல் கொடுக்கும் மாபெரும் இயக்கம் தி.மு.க.தான்.

கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளிலும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள், அதிலும் முதல் தலைமுறையினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு முன்பு இருந்தது. ஆனால் அது அனைத்து தலைமுறையினருக்கும் இட ஒதுக்கீடு சலுகையை வழங்கியது தி.மு.க. ஆட்சி காலத்தில் தான். கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோதுதான் மாநில அளவில் சிறுபான்மை நலவாரியம், சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டது.

வீரமாமுனிவர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இப்படி பல்வேறு திட்டங்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றி தந்த ஆட்சியும் தி.மு.க.தான். கிறிஸ்தவ மக்களுக்கு சோதனைகள் வரும்போதெல்லாம் முதல் குரல் கொடுக்கக்கூடிய தலைவராக கருணாநிதியும், கட்சியாக தி.மு.க.வும் விளங்கிக்கொண்டு இருக்கிறது. மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த கருணாநிதி அதை வாபஸ் பெற வைத்தார். தமிழகத்துக்கு, இந்தியாவுக்கு ஒரு நல்ல ஆட்சியை உருவாக்கி தர உறுதியேற்கும் விழாவாக கருத வேண்டும். நேற்று இருந்தோம், இன்று இருக்கிறோம். நாளைக்கும் நிச்சயம் உங்களுடன் தான் இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.