மக்கள் நலக்கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை, பிரச்சனைகளின் அடிப்படையில் நால்வரும் மீண்டும் கைகோர்ப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த நவம்பர் 8-ந்தேதி பிரதமர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்திய பொருளாதாரத்தை மிக மோசமான வகையில் நிலைகுலைய வைத்திருக்கிறது. அறிவித்த நாளில் இருந்து இதுவரை இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சாமானியமான மக்கள், நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள்மிக மோசமான வகையில் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சிறு வணிகம், சிறு தொழில்கள் கடுமையான அளவில் பாதிப்படைந்துள்ளன.
இந்த அறிவிப்பு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, ஊழலை ஒழிப்பதற்காக என்று பிரதமரால் விளக்கப்படுகிறது. ஆனால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டு 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ததன் மூலம் கருப்பு பண நடவடிக்கைகள் இரட்டிப்பாக மாறியிருக்கிறது. இது வெறும் நடைமுறை சிக்கல் அல்ல. இது அடிப்படையிலேயே ஒரு கொள்கை அல்லது கோட்பாட்டு சிக்கல்.
உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் என்கிற அடிப்படையில் இந்திய அரசின் பொருளாதார கொள்கை இருப்பதால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் அரசு துறைகளை, பொதுத்துறைகளை முழுமையாக தனியார் மயப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் பிரதமர் நமது பொருளாதார கொள்கையை வரையறை செய்து இயங்கி வருகிறார். முழுக்க, முழுக்க வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வங்கிககளை வலிமைப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை பிரதமர் செய்திருக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு அதற்குரிய அணுகுமுறைகளை கையாளாமல் பிரதமர் திடீரென்று ஒரு நாள் தோன்றி இன்னும் சில மணி நேரங்களில் இந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது ராணுவ ஆட்சி நடைபெறும் தேசத்தில் ராணுவ அதிபர் செய்கிற அறிவிப்பை போன்று அமைந்திருக்கிறது. இது இந்திய இறையான்மைக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதனால் ஒவ்வொரு குடிமகனும் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற 28-ந்தேதி அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை புதுச்சேரியில் நடத்துகிறோம். இதில் தோழமை கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
ம.தி.மு.க. இதில் பங்கேற்கவில்லை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் இதுபற்றி வெளிப்படையாக பேசி இந்த முடிவெடுத்திருக்கிறோம். ம.தி.மு.க.வை புறக்கணிக்கவில்லை. மதிமுகவுக்கு அழைப்பு கொடுக்காமல் தவிர்க்கவில்லை.
வைகோவிடம், இது என்ன மாநாடு, என்ன தலைப்பு, என்ன பொருள் என்பதையெல்லாம் கலந்து பேசிய பிறகு ம.தி.மு.க. பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறது. கருப்பு பண நடவடிக்கையை ஆதரிக்கிறது. எனவே அதனை எதிர்த்து நடத்துகிற இந்த மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்க வாய்ப்பில்லை என வெளிப்படையாக எங்களிடம் கூறினார். அப்படி ஒரு புரிதலுடன் தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதனால் மக்கள் நலக்கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.
மக்கள் நலக்கூட்டணியில் ஒரே வரையறை தான். உடன்பாடுள்ள பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது, முரண்பாடான பிரச்சனைகளை பொது மேடை களில் விவாதிப்பதில்லை. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தான் நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறோம். ஆகவே இந்த பிரச்சனையில் நாங்கள் 3 கட்சிகளும் எதிர்ப்பை முன்னெடுத்து செல்கிறோம். இந்த மாநாட்டில் ம.தி.மு.க. எங்களோடு பங்கேற்கவில்லை.
மக்கள் நலக்கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை. பிரச்சனைகளின் அடிப்படையில் போராடுகிற போது அது மக்கள் நலக் கூட்டியக்கம். தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுகிற போது மக்கள் நலக் கூட்டணி. இப்படிப்பட்ட கூட்டியக்கம் அல்லது கூட்டணி என்பது எப்போதுமே நிரந்தரமாக இருக்க முடியாது.
பிரச்சனைகளின் அடிப்படையில் நால்வரும் கைகோர்ப்போம். தேவைப்படும் போது அதற்கான சூழல் உருவாகிற போது மறுபடியும் நால்வரும் ஒரே மேடையில் தோன்றுவோம்.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது பாராம்பரிய விளையாட்டு. அது விலங்கு வரைகள் என்கிற வரையறுக்குள் வராது. ஆகவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு நீதிமன்ற நடவடிக்கைகளையும் தாண்டி அனுமதிக்க வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகளின் வேண்டுகோள்.
மத்திய அரசு சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் குறிப்பாக இஸ்லாமியர்களின் பாரம்பரிய உரிமைகளை சிதைக்கும் வகையில் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. அதற்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் பரப்பியிருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் என்பது இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானதாகத் தான் இருக்க முடியும். எனவே மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.