இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் உயிர்களைக் காப்பதற்கும் அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார ஸ்தாபனமும் தயாராக இருப்பதாக இலங்கையிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஒலிவியா நீவெராஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
உலகளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாகக் கண்டறியப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பொன்று காணப்படுகின்றது. இரண்டாம் உலகப்போரின் பின்னர் இந்த உலகம் எதிர்கொண்டுள்ள மிகமோசமான சவால் இதுவாகும். இதிலிருந்து இலங்கை உட்பட எந்தவொரு நாடும் காப்பாற்றப்படவில்லை. இதனை நாம் தீவிரமாகக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
சுமார் ஒருவருடத்திற்கும் அதிகமான காலம் நாமனைவரும் கொவிட் – 19 வைரஸ் பரவலுடன் போராடி வருகின்றோம். அதன் விளைவாக பலர் களைப்படைந்திருக்கலாம். ஆனால் நாம் இப்போதுதான் மிகவும் சவால்மிக்க சூழ்நிலைக்குள் நுழைகின்றோம் என்பதுவே யதார்த்தமாக இருக்கலாம்.
உலக சுகாதார ஸ்தாபன அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஒலிவியா நீவெராஸ் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், முன்னரங்கில் பணியாற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓய்வின்றி தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் உயிர்களைக் காப்பதற்கும் அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார ஸ்தாபனமும் தயாராக இருக்கின்றது.
ஆனால் அதிகாரிகள், சுகாதாரப்பணியாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரம் இந்தப் போராட்டத்தைத் தனித்து முன்னெடுப்பது இயலாத காரியமாகும்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தடுப்பூசி ஏற்றுவதென்பது மிகச்சிறந்த ஆயுதமாகும். ஆனால் நாம் தற்போதுள்ள சூழ்நிலையில் அதனைச் செய்வது கடினம் என்பது நிரூபணமாகியுள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான, ஆதாரங்களின் அடிப்படையிலான உத்திகள் இருக்கின்றன
சனக்கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல், மூடப்பட்ட இடங்களில் இருப்பதைத் தவிர்த்தல், நபர்களுடன் நெருக்கத்தைப் பேணுவதைத் தவிர்த்தல் ஆகியவற்றை நாம் செய்யமுடியும்.
அதேபோன்று எம்மையும் எமது அன்பிற்குரியவர்களையும் பாதுகாத்துக்கொள்வதற்கு உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.