ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை

324 0

ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

மக்களின் கருத்துச்சுதந்திரத்தை, குறிப்பாக ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியிருக்கும் மன்னிப்புச்சபை, ஊடகத்துறையில் பணியாற்றுவோருக்கான பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வதன் மூலம் அவர்கள் எவ்வித அச்சமும் இழப்புமின்றி உண்மையான செய்திகளை அல்லது தகவல்களை வெளியிடுவதற்கு அல்லது பேசுவதற்கு இடமளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அண்மைய வருடங்களில் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மிகவும் கவலைக்குரியவையாகும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித பக்கச்சார்புமின்றி முழுமையாக விசாரணை மேற்கொள்வதுடன், அவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.