இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிரந்தர கப்பல் சேவை அவசியமென்று ஒருபோதும் நான் தெரிவிக்கவில்லை. தென்னிந்தியாவில் நடைபெறும் திருவாதிரை நிகழ்வுக்கு ஒரு படகை ஏற்பாடு செய்து தருமாறே நான் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தேன் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
இலங்கை இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நிரந்தர கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கை இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்தையோ அல்லது இருநாடுகளுக்கு இடையிலான தடைகளை நீக்கும் முயற்சிகளையோ என்மூலம் எவரும் முன்னேடுக்கவில்லை.
இந்தியாவில் நடைபெறும் இந்துமத நிகழ்வான திருவாதிரை நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் வடக்கின் சிலர் என்னிடம் முன்வைத்தனர். அதனடிப்படையிலேயே அரசாங்கத்திடம் குறித்த கோரிக்கையினை தான் முன்வைத்துள்ளதாகவும் எனது கோரிக்கைக்கு இன்னும் அரசாங்கம் பதில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.