கொரோனாவின் கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் கடைப்பிடித்து, மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டு இருக்கிறது. டெல்லி, கேரளா போன்று வரும் மாதங்களில் மற்ற மாநிலங்களுடைய நிலையும் ஏற்படுமோ? ஏன்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
இது தொடருமேயானால் மருத்துவனைகளில் இடம் கிடைப்பதில் சங்கடங்களும், ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்படலாம். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர பல வகைகளில் கண்டிப்போடும், கோட்பாடுகளோடும் செயல்பட்டுக் கொண்டு இருந்தும் கூட, இந்த பெரும் தொற்று பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் கொரோனாவை படிப்படியாக குறைக்க பல மாதங்கள் ஆகும்.
அதோடு பருவ காலங்கள் மாற்றத்திற்கு ஏற்ப தற்பொழுது “கத்திரி வெயில்” (அக்னி நட்சத்திரம்) ஆரம்பித்து இருக்கிறது. வெயிலின் தாக்கமும் மிக அதிகமாக இருக்கும்.
ஆகவே மக்கள் சில வாரங்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது நம்மை பயக்கும், அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியேவரவும். எனவே கொரோனாவின் கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் கடைப்பிடித்து, மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும் என த.மா.கா. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.