நாற்புறமும் பசுமை …
நிலமகள் பசுமைச் சேலைகட்டி
மனதுக்கு புத்துயிர் ஊட்டிய காலம் …
விளைந்து சரிந்த வயல் நங்கைகள்
நாணி நிற்கும் அழகு …
வன்னிமயில் தோகை விரித்து
திருநடம் புரியும் மிடுக்கு …
புள்ளினங்கள் கீச்சிடும் சத்தம் …
இவையனைத்தும் அழகொளிர்ந்த
வன்னிமண்ணில் …
பெரும் போர்ப் பரணியின்
இடி முழங்கி தீப்பூக்கள் பூத்தன …
சிங்கள இனவாதப் பற்கள்
வன்னிமண்ணை கடித்துக் குதறியது …
உலக வல்லரசுகளும் ஒன்று கூடி
சிங்கள இனவெறியின் அபசுரங்களுக்கு
தாளம் போட்டது …
தமிழரின் பண்பாட்டு இசையான
நாதஸ்வரமும் மேளமும் …
ஆதி இசையாக ஒலித்த
தமிழிசையின் நாதமும்
ஒலிபெருக்கியின் அலையில் ஏறி
காற்றில் மிதந்து வரும் – ஆனால்
அன்று … “தமிழரின் ” ஓலக்குரல்கள்
பெருவெளியெங்கும் பேரொலியாகிப் பரவியது …
சுற்றி வளைத்த அக்கினிப் பொறிக்குள்
தமிழினம் தவித்தது …
சரமாரியான குண்டுப்பொழிவுகள் …
வன்னிமண்ணை
சிங்கள இனவெறியின் குண்டுகள் உழுதது …
தமிழரின் வளங்கள் யாவும்
பொசுக்கி எரிக்கப்பட்டது …
நாற்புறமும் சிதறியோடிய மக்கள் …
அப்பொழுதான்
அந்தக் கொடூரம் நிகழ்ந்தது …
செல் விழுந்து சிதறுகிறது …
சிதறியோடிய குடும்பத்தில் ஓர் தாய் …
அந்தத் தாயின் உயிரைப் பலிகொள்கிறது
செல்லின் அக்கினித் துண்டுகள்…
பக்கத்தில் ஓடிய மகன்
துடிதுடித்து திரும்புகிறான் …
தாயின் குருதி தாய்மண்ணில் கலக்கிறது …
தாயின் உயிர் ஈழவானில் கலக்கிறது …
அம்மா என்று கத்தியபடி அணைக்கிறான் …
அந்தச் சணத்தில் மற்றுமொரு செல் விழுகிறது …
குளிப்பாட்டி கூறைப் புடவை கட்டி
பொட்டிட்டு பூமாலை சாற்றி
பாடை கட்டி அலங்கரித்து
ஊரும் உறவுகளும் கூடி
ஒப்பாரிப் பண்பாடி
தமிழரின் பறையடித்து
சாவைத் தெரிவித்து
மனதார அழுது மனத்தைத் தேற்றி
துயரத்தில் பங்கு கொண்டு
பாடைகாவி சுடலைக்கு சென்று
புதைத்து மண்போட்டு
இறுதி வழியனுப்பும் தமிழினத்தில்
அன்று நடந்தது என்ன ?
துடிக்கிறான் மகன் …
தவிக்கிறார் தந்தை …
அடுத்த கணம் என்ன நடக்கப்போகிறது ?
சிந்திக்க நேரமில்லை !
அனல்கக்கி பாய்கிறது குண்டுகள் …
தாயின் உயிரற்ற உடலை என்னசெய்வது ?
அருகிருந்த மண்ணைத் தோண்டி
பத்துமாதம் சுமந்து சீராட்டி வளர்த்தவளை
புதைத்து மூடுக்கிறான் …
மனம்விட்டு அழுது தீர்க்கவும் முடியாத நிலையில்
தாயைப் புதைத்த மண்ணில்
ஒரு பூ போட்டு வணங்க முடியாத நிலையில்
மனமெங்கும் தாயின் நினைவுகளை
சுமந்தபடி மனம் நொந்து செல்கின்றான்
குண்டுகள் அதிர்கின்றன …
தந்தையையும் ,சகோதரர்களையும்
காத்தபடி ஓடுகிறான் …
ஓடும்போது அவன் கண்ட காட்சி
அவன் மனதை உலுக்கியது …
ஆம் … தமிழரின் பல சடலங்கள்
அனாதைப் பிணங்களாக
எரிந்து கொண்டு இருந்தன .
அகரப்பாவலன்.