முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்களிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது.
இந்த ஆக்கிரமிப்புத் தொடர்பில் அரசுடன் பேசி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாடு தொடர்பாக 03.05.2021அன்று அப்பகுதி மக்களால் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜரினை இலங்கைத் தமிழரசுக்கட்சத் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 04.05.2021 இன்று நேரில் சந்தித்துக் கையளித்திருந்தார்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகாங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தந்தை செல்வா தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து முக்கியமாக இந்த சிங்கள மக்களுடைய குடியேற்றங்கள் தமிழ்ப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதனால் எமது இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கின்றதான நடவடிக்கைகள் எல்லாம் இடம்பெறுவதாக நாங்கள் தந்தை செல்வாவின் காலத்திலிருந்தே எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்களைப் பலபகுதிகளில் குடியேற்றி எமது நிலங்களைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக எமது கட்சி அயராது உழைத்தது.
எங்களுடைய பிரதேசங்களில் சிங்கள மக்களின் பெரும்பான்மைத்துவம் வந்தால் தமிழர்களுடைய பிரதேசம் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும்.
நாங்கள் எங்களுடைய பிரதேசத்தினை ஆளப்போகின்றோம் என்ற கருத்திற்கு இடமில்லாமல் போயிருந்திருக்கும். இவ்வளவு காலமும் தமிழரசுக்கட்சி அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது.
அதற்குப் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி, அதற்குப்பின்னர் தமிழரசுக்கட்சி, விடுதலைப் புலிகள்கூட இந்த தமிழ் பிரதேசங்களினுடைய நிலங்களைப் பாதுகாப்பதற்காக அவர்களும் ஆயுதம் ஏந்திப் போராடியிருக்கின்றனர்.
ஆனால் தற்போது இந்தப் போருக்குப் பின்னரும் சென்ற ஆட்சிக்காலத்தில் நாங்கள் ஆதரித்த சிறீசேனா ஜனாதிபதியின் தலைமையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மகாவலி அதிகாரசபையினாலே ஆக்கிரமிக்கப்படுகின்ற நிலைமைகளுக்கு எதிராக, அதேவேளை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கள் இருக்கும் நிலங்கள் தொடர்பாக கடந்த ஆட்சியாளர்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம். பல போராட்டங்களும் இடம்பெற்றுவந்திருக்கின்றன.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நிலைமைகள் தொடர்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என்னிடம் தெரியப்படுத்தியிருக்கின்றார்.
குறிப்பாக நான் அந்த முல்லைத்தீவின் மணலாற்றுப் பிரதேசத்தைப் பார்வையிட்டிருக்கின்றேன். அந்தப் பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றேன்.
அந்தப் பகுதிகள் தற்போது செம்மலையிலிருந்து, கொக்கிளாய் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி வரைக்கும் இருக்கின்ற பகுதிகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமித்து, அப் பகுதிகளை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு அவர்கள் நடவடிகை மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம்.
இந்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு எங்களுடைய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அந்தந்தப் பகுதியைச்சேர்ந்த உறுப்பினர்களும் இவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் என்னோடு பேசியிருக்கின்றார்கள்.
அந்தவகையில் இவ்வாறு முல்லைத்தீவில் இடம்பெறும் ஆக்கிரமிப்புத் தொடர்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் 04.05.2021 இன்று என்னைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், ஆக்கிரமிக்கப்படும் பகுதிகளிலுள்ள மக்களால் வழங்கப்பட்ட மகஜர் ஒன்றினையும் என்னிடம் வழங்கியிருந்தனர்.
இந் நிலையில் கல்முனை பிரச்சினை தொடர்பாக சமல் ராஜபக்சவுடன் (04) இன்று எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசவுள்ளனர்.
அக்கலந்துரையாடலில் முல்லைத்தீவில் இடம்பெறும் இந்த மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆக்கிரமிப்புத் தொடர்பாகவும், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புத் தொடர்பிலும் சமல் ராஜபக்சவுடன் பேசுமாறு பாராளுமன்ற உறுப்பினர்சாள்ஸ் நிர்மலநாதனிடம் தொலைபேசியுடாக அழைப்பு ஏற்படுத்தி வலியுறுத்தியிருக்கின்றேன்.
நாங்கள் ஒட்டுமொத்தமாக இதுதொடர்பாக பிரதம அமைச்சருடனும் இதுதொடர்பில் பேசவேண்டும்.
<p>நாங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக, இந்த அரசாங்கத்துடன் இந்த விடயம் தொடர்பில் பேசி இப் பிரச்சினையை ஒருதீரவுக்குக்கொண்டுவரவேண்டும்.
எங்களுடைய நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டும். எங்கள் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
எங்களுடைய பெரும்பான்மைத்துவம் தமிழ் பிரதேசங்களில் சீர்குலைக்கப்படக்கூடாது. குடிப் பரம்பலை மாற்றியமைக்கப்படக்கூடாது. அதற்குரிய செயற்பாடுகளால் தொடர்ந்து ஈடுபடுவோம்.
இந்த ஆக்கிரமிக்கு எதிராக பாரிய அளவில் மக்களைத் திரட்டி நாம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும்.
ஆனால் தற்போது கொரோனாத் தொற்று தீவிரமடைந்திருக்கின்ற நிலையில் நாம் இந்த ஆக்கிரமிப்பு விடயம் தொடர்பாக அரசுடன் பேசி தீர்வினைக் காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அந்த முயற்சி தொடரும் – என்றார்.