கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசியல் தீர்மானங்கள் வேண்டாம்- ஜே.வி.பி.

254 0

கொரோனா பரவல் தற்போது எல்லை மீறிச்சென்றுள்ளது. எனவே, இனியாவது இவ்விடயத்தில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்காது, தொற்று நோயியல் நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதாரத் தரப்பினரின் அங்கத்துவம் வகிக்கின்ற குழுவொன்றை நியமித்து தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

ஏப்ரல் 8 ஆம் திகதி இலங்கையில் புதிய வகை வைரஸ் சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தால் இனங்காணப்பட்டு சுகாதார அமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு கிடைத்த பின்னர் அதுதொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தது? இந்த வைரஸ் தாக்கத்தால் இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது நிலைமை தீவிரமடைந்துள்ளது. எனவே, இனியாவது இவ்விடயத்தில் அரசியல் தலையீடுகளுடன் தீர்மானங்களை எடுக்காமல், தொற்று நோயியல் பிரிவின் பிரதானிகள் உள்ளிட்ட சுகாதாரத் தரப்பினர் அடங்கிய குழுவிடம் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை ஒப்படைக்குமாறு வலியுறுத்துகின்றோம். தொற்று நோய்ப் பிரிவு என்பது அரசாங்கத்துக்கு ஏற்ப செயல்படுவதல்ல. அதனைச் சுயாதீனமாக இயங்குவதற்கு இடமளிக்க வேண்டும்.

தற்போது கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே துறையில் விஷேட நிபுணத்துவம் உடையவராவார்.

ஆனால், அவரால் முன்வைக்கப்படுகின்ற யோசனைகள் ஏனைய அரசியல்வாதிகளால் தோற்கடிப்பட்டுள்ளன. இவ்வாறான செயல்பாடுகளால் தான் அதிருப்தியடைந்துள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அரசாங்கத்தின் பேச்சாளரைப் போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

உண்மையில் இராணுவத்தளபதிக்கு உயர்மட்டத்திலுள்ள பாதுகாப்பு பிரதானியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே உத்தரவிடுகின்றார். எனவே இராணுவத்தளபதியை அவருக்கு உரிய பணியில் மாத்திரம் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொரோனா கட்டுப்பாடு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு தொற்று நோயியல் நிபுணர்கள் அடங்கிய முன்னிலை சுகாதார அதிகாரிகளை உள்ளடக்கிய பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். இதனையே முதலாம் அலை ஏற்பட்ட காலத்திலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நிலைமை தீவிரமடைந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் கூட 24 மணித்தியாலங்களுக்குள் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு பி.சி.ஆர். பரிசோதனை கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.

இது மாத்திரமின்றி மேலதிக ஒட்சிசன் உற்பத்தி, தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட சகல விடயங்களிலும் அரசாங்கம் உரிய தீர்வுகளை எடுக்க வேண்டும்.

அத்தோடு தொற்று நோயியல் நிபுணர்கள் உள்ளடங்கிய சுகாதாரத் தரப்பினர் அடங்கிய குழுவொன்றிடம் கொரோனா தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான பொறுப்பை ஒப்படைக்குமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்- என்றார்.