ஆற்றமுடியாத காயங்கள் … உயிரைக் காவுகொண்ட துயரங்கள் …!
பல்குழல் சுடுகலன்கள்
சட சடவென தாளம் தப்பாமல்
குண்டுகளைப் பொழிந்தன …
வான்வெளியில் கிபீர் விமானங்கள்
நிரை நிரையாய் …
குண்டுகளைப் போட்டன …
பசுமை நிறைந்த வன்னிமண்
தமிழரின் இரத்த அணுக்களால்
செம்பாட்டு மண்ணாக்கிச் சிவந்தன …
பார்க்குமிடமெங்கும் ஓலக்குரல்கள் …
சிதறித் துண்டுகளாகிய உடலங்கள் …
யார் யாரைக் காப்பாற்றுவது ?
போர்விரித்த நெருப்பாறு
ஓடிக்கொண்டே இருந்தது …
நீந்திக் கடப்பவர் யார் ?
மூழ்கி அமிழ்தவர் யார் ?
மரண ஓலங்கள் வானைப் பிளந்தன …
இனவெறி பேய்க்கு …
பாலகர் யார் ?
முதியவர் யார் ?
பெண்கள் யார் ?
இளைஞர் யார் ?
தாய்,தந்தை யார் ?
உறவுகள்தான் யார்?
அதன் ஒரே நோக்கு
“இன அழிப்பு ”
பித்தம் தலைகேறியவனுக்கு
சுத்தமனம் வெளிவராது …
வீர உரம் கொண்ட வீரரும்
வீர மனம் கொண்ட மக்களும்
முடிந்தவரை காப்பாற்ற முனைந்தனர் …
கையிழந்து ,காலிழந்து துடிப்பவரை
கைகளில் ஏந்திய படியும் …
உழவு வாகனத்தில் ஏற்றிய படியும்
விரைந்தனர் வைத்தியசாலை நோக்கி …
அங்குதான் …
“இனவெறிப் பேய் ”
தன் கோரத் தாண்டவத்தை
கொடூரமாக நடத்தியது …
“போர் விதிகளை மீறி ”
” மனிதத்தைக் கொன்று ”
தன் தீ நாக்குகளை
வைத்தியசாலைகள் மீது பதித்தது …
வைத்தியசாலைகள் சிதறிச் சின்னாபின்னமாகின …
ஏற்கனவே …
மருத்துத் தடை
உணவுத் தடை
இருந்த வைத்தியசாலைகளும்
சிதைக்கப்பட்டுவிட்டன …
இது சிங்களம்
திட்டமிட்டுச் செய்த
கொடிய சதி …
ஆற்றமுடியாத காயங்கள்
உயிர்களை விழுங்கியன …
அறம் மறுத்த சிங்களம்
கூடி மகிழ்ந்தன …
இரு இனவெறிச் சகோதரர்களும்
கட்டித்தழுவி உச்சி முகர்ந்து கொண்டார்கள் …
இந்தப் போர்க்குற்றத்தை
உலகம் இன்னும் ஏற்கவில்லை …
அது சுயநல சாக்கடையில் இருந்து
இன்னும் எழவில்லை .
அகரப்பாவலன்.