யேர்மனியின் தலைநகர் பேர்லினில் பார ஊர்தி மூலம் நத்தார் சந்தையில் நேற்றைய தினம் தாக்குதல் நடைபெற்றுள்ளது.இத் தாக்குதல் பயங்கரவாதத்தின் பின்னணி கொண்டுள்ளதாக வலுவான சந்தேகம் இருப்பதை யேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதுவரையில் 12பேர் இறந்துள்ளனர், 68பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் பேர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் மார்கெட் ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த மக்களுக்காக இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மலர் வணக்கம் செலுத்தி சுடர் ஏற்றினார்கள். மாலை 6 மணிக்கு கோரமான சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகாமையில் உள்ள பிரசித்திபெற்ற தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இவ் நிகழ்வில் அரச தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தமது இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்தனர். பேர்லின் வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.