கிழக்கு மாகாண முதலமைச்சின் மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

333 0

unnamed-1கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள அமைச்சுக்களுக்கான  வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு 17 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது,

முதலமைச்சரின் கீழுள்ள 13 திணைக்களுங்களுக்கான வாக்கெடுப்பு செவ்வாய் கிழமை நடைபெற்ற போது  ஆதரவாக  25வாக்குகள் கிடைக்கப் பெற்று பெரும்பான்மை வாக்குகளால்  வெற்றி பெற்றதுடன்  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் திணைக்களங்கள் சபையில் பெரும்பானமை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றது,

விவாதத்தின் போது   எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும்  முதலமைச்சரின் சேவைகளையும்  அவரின் கீழுள்ள திணைக்களங்களின் நடவடிக்கைகளையும்  பாராட்டி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய ஆண்டுகளில்   ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை தாண்டாத நிதியொதுக்கீடுகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அயராத முயற்சியினால் 3000 மில்லியனுக்கு அதிக நிதியை இந்த ஆண்டு முதலமைச்சர்  மாகாணத்துக்கு கொண்டு வந்திருந்தமை சபையில் பலரது வரவேற்பை பெற்றது.

இம்முறை 2017 ஆம் ஆண்டு  1800 மில்லியன் ரூபாவே கிடைக்கப்  பெற்றுள்ள நிலையில்  அதனை அதிகரித்துப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துவருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மத்திய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கு ஊடாக கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட  நிதிகளை மாகாணத்துக்குள் முழுமையாக கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக அவர் சபையில் தெரிவித்த போது  சபை உறுப்பினர்கள் மேசைகளை தட்டியவாறு தமது  ஆதரவை  தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.