கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்த நாட்டு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதன் பலனாக அங்கு கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கொரோனா உயிரிழப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
அதே சமயம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்த நாட்டு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதன் பலனாக அங்கு கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது.
ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதால் திட்டமிட்டதைவிட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அந்தவகையில் அமெரிக்காவில் இதுவரை 10 கோடி பேர் கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டதாக, அதாவது தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 30.5 சதவீதமாகும்.
அதேபோல் 10 கோடியே 44 லட்சத்துக்கும் அதிகமானோர் குறைந்தது கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசை போட்டுக்கொண்டு உள்ளனர் என்றும் இது மொத்த மக்கள் தொகையில் 43.6 சதவீதம் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.