கொரோனாவை கட்டுப்படுத்த ஒடிசாவில் 14 நாட்கள் பொதுமுடக்கம்

311 0

ஒடிசாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுதினம் முதல் 14 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் முழு அடைப்பும் அமலாகிறது.ஒடிசாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுதினம் முதல் 14 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் முழு அடைப்பும் அமலாகிறது.

ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் அரசு 14 நாட்கள் பொது முடக்கத்தை அமல்படுத்த முடிவு எடுத்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை மாநில அரசு தலைமைச்செயலாளர் சுரேஷ் சந்திர மோகபத்ரா நேற்று வெளியிட்டார்.

இந்த பொது முடக்கம் நாளை மறுதினம் (5-ந் தேதி) நடைமுறைக்கு வருகிறது. 19-ந் தேதி காலை 5 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் முழு அடைப்பு இருக்கும்.

ஊரடங்கு, முழு அடைப்பு நாட்களில் பொது போக்குவரத்து இருக்காது. வாடகை கார்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் சேவை இராது.

எல்லாவிதமான சமூக, அரசியல், மத, கல்வி, கலாசார நிகழ்ச்சிகள், பொதுமக்கள் கூடுகைகள் ஊரடங்கு நாட்களில் இருக்காது.

பொதுமக்கள் அருகில் உள்ள (வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில்) பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சென்று வாங்கிக்கொள்ளலாம்.

திருமண விழாக்களை உள்ளூர் அதிகாரிகள் அனுமதியுடன், 50 பேருக்கு மிகாமல் இருந்து நடத்திக்கொள்ளலாம். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நாடக அரங்குகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.

அதே நேரத்தில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை தொடரும். தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.