போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி

301 0

போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் முத்துச்சாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கணேஷ் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரேம் சந்தர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

போடி தொகுதியில் பதிவான வாக்குகள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. மொத்தம் 28 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தங்க தமிழ்ச்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மாறிமாறி முன்னிலை வகித்தனர்.

இரவு 10 மணி நிலவரப்படி 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் 67 ஆயிரத்து 685 வாக்குகள் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் 59 ஆயிரத்து 761 வாக்குகள் பெற்றார். அவரை விடவும் ஓ.பன்னீர்செல்வம் 7,924 வாக்குகள் முன்னிலை வகித்தார்.

இந்நிலையில் போடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை விட 11,055 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.