அமெரிக்காவில் சூதாட்ட விடுதியில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி

297 0

அமெரிக்காவில் கையில் துப்பாக்கியுடன் சூதாட்ட விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.‌

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் பிரவுன் நகரில் கேசினோ என்று அழைக்கப்படும் சூதாட்ட விடுதி உள்ளது.‌ இங்கு நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் சூதாட்டங்களை விளையாடிக் கொண்டிருந்தனர்.‌

அப்போது கையில் துப்பாக்கியுடன் சூதாட்ட விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.‌ சூதாட்ட விடுதியில் இருந்த அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.‌

ஆனாலும் அந்த மர்ம நபர் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார். இந்தத் துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

இதற்கிடையில் இந்தத் துப்பாக்கி சூடு குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சூதாட்ட விடுதியை சுற்றி வளைத்து அதன் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபரை தங்களிடம் சரணடைந்து விடும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர் அதற்கு செவி சாய்க்காமல் போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்ன ? என்பது உடனடியாக தெரியாத நிலையில் போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதேசமயம் இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த துப்பாக்கி சூடு எனவும் சமூகத்துக்கு எந்த வித அச்சுறுத்தல் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.