7 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் அஞ்சல் சேவையாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகம் மற்றும் ஏனைய அஞ்சலகங்களில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
தொழிற்சங்க போராட்டம் காரணமாக, பல அஞ்சலகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதன்காரணமாக போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக அபராத தொகையை செலுத்த அஞ்சலகங்களுக்கு சென்ற சாரதிகள் இன்றைய தினம் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில், இன்றைய தினம் அபராத தொகையை செலுத்த தவறியவர்களுக்கு சலுகை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவற்துறையின் போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் பாலித்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தங்களது போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்க பெறாத பட்சத்தில் போராட்டம் தொடரும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
பதவி உயர்வு மற்றும் நியமனம் வழங்கலின் போது இடம்பெறுகின்ற முறைக்கேடுகளை தடுத்தல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.