போலி காசோலையை பயன்படுத்தி 43 இலட்சம் ரூபாய் மோசடி!

374 0

காசோலை மோசடி தொடர்பில் 4 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் போலியான காசோலைகளை பயன்படுத்தி தனியார் வங்கியொன்றில் இருந்து 43 மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனியார் இரும்பு கம்பி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் பெயரில் சந்தேகநபர்கள் குறித்த போலி காசோலையை தயாரித்து பணம் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் 4 சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு இடையே குறித்த தொழிற்சாலையின் வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நிறைவேற்று அதிகாரி ஒருவர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்நாட்டிற்கு வந்த நபரொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.