முல்லைத்தீவு மாவட்டத்தில் கரும்புச் செய்கையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த கரும்பு செய்கை மேற்கொள்ள முதலீட்டாளர்கள் பலர் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செயற்திட்டத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரும்பு செய்கையின் பின்னரான அறுவடைக்காக நிலையான விலையினை நிர்ணயிப்பதற்கும் தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் கூறினார்.
இதனிடையே, வடமாகாணத்தில் 4 தொழிற்சாலைகளை புதிததாக ஆரம்பிப்பதற்கு தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆணையிறவு உப்பளம், பரந்தன் இராசாயன தொழிற்சாலை, காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை என்பவற்றை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.