தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் -திமுக முன்னிலை

313 0

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.
மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 60 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி 42 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 18 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.