ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

284 0

ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை, ‘வாபஸ்’ பெறும் நடவடிக்கை, நேற்று துவங்கியது.

அமெரிக்காவில், 2001, செப்., 11ல், அல் – குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவில் இருந்த, அல் – குவைதா பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அல் – குவைதா தலைவர் ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலிபான் அமைப்பு மற்றும் ஆப்கன் அரசுக்கு இடையே, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. ஆனால், முடிவு எட்டப்படவில்லை.கடந்த, 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை, 1,481 லட்சம் கோடி ரூபாயை, அமெரிக்கா இதற்காக செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.’முடிவில்லாத போரில் ஈடுபடுவதை விரும்பவில்லை. அதனால் படைகளை திரும்பப் பெறுகிறோம்’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்தார்.

latest tamil news

 

இதன்படி, படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நேற்று துவங்கின. அமெரிக்க படைகளைச் சேர்ந்த, 3,500 வீரர்களும், ‘நேட்டோ’ படையைச் சேர்ந்த, 7,000 வீரர்களும், ஆப்கானிஸ்தானில் உள்ளனர். ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை, விமானங்கள் வாயிலாக எடுத்துச் செல்லும் நடவடிக்கை ஏற்கனவே துவங்கிவிட்டது. வீரர்களும், தங்கள் உடமைகளுடன், நாடு திரும்பத் தயாராக உள்ளனர்.

 

தொடரும் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்த முயற்சி நடக்கும் நிலையில், தாக்குதல்களில் தலிபான்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை துவங்கியுள்ள நிலையில், புலே ஆலாம் பகுதியில் பயங்கரவாதிகள், நேற்று தாக்குதல் நடத்தினர். வெடிபொருள் நிரப்பிய டிரக் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், 21 பேர் உயிரிழந்தனர்.