உலகத் தொழிலாளர் நாளான மே1ல் யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தற்போது நிலவும் கொறோனா பேரிடர்கால நெருக்கடிகள் இருக்கும் போதிலும், சுகாதார நடைமுறை ஒழுங்கினைப் பேணியவாறு, நிகழ்வுகள் யாவும் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டன.
யேர்மனியின் ஒபகெளசன் நகரில் நடைபெற்ற மே நாள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் மற்றும் பேரணியில் தாயக புலம்பெயர் உறவுகள், இடதுசாரிக் கட்சி, இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்களென பலரும் கலந்து கொண்டனர்.
பேரணியின் நிறைவிடத்தில் துறைசார்ந்தவர்களின் கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றது. எமது தாயக புலம்பெயர் மக்கள் சார்பில் கருத்துரைத்தபோது, தொழிலாளர்கள் பல்வேறு வேலைத்தளங்களில் குறிப்பாக மருத்துவத்துறை சார்ந்த பணிகளில் குறைந்த ஊதியத்தில் கூடுதலான பணிகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதும், பல தொழில் நிலையங்களில் குறிப்பாக இறைச்சி பதனிடல், பொதியிடல் போன்ற பணிகளில் முதலாளிகள் பெருமளவு இலாபமீட்டினாலும் அதனை தொழிலாளர் நலனுக்காக பகிர்வதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஈழத்தமிழரின் தாயக பூமியில் சிங்கள பெளத்த பேரினவாத அரசு மாபெரும் இனவழிப்பை நிகழ்த்திய போதிலும், அதற்கான நீதியை பெறுதலில் தமிழினம் தொடர்ந்து போராடி வருகின்றது, ஆனால் உலகின் கவனம் இன்னும் எமக்கு நீதியை பெற்றுத் தரவில்லை, அதற்காக நீதிவேண்டி போராடும் எம்மினத்தின் உண்மையைப் புரிந்து கொண்டு எமக்கு தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும் எனவும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, ஈழத்தமிழர் மக்களவை ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் ஏனைய வாழ்விட தேசத்தின் தோழமை உணர்வுகள் கூட்டிணைந்த மே நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக அமைந்தது.